வரலாறு
புதுச்சேரி அல்லது புதுவை என அழைக்கப்படும் புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக உள்ளது. புதுச்சேரி மாநிலம் என்னும் இப்பகுதி முன்னர் ஃபிரஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்தது. இப்பகுதியானது, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத நான்கு பகுதிகளை (புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம்) உள்ளடக்கியது. புதுச்சேரியும், காரைக்காலும் தமிழ்நாடு மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. மாகே, கேரளா மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. ஏனம், ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது
பிஜப்பூர் சுல்தான் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி 1693- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஃபிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி புதுச்சேரி நகரத்தின் அடித்தளத்தை அமைத்தது. ஃபிரஞ்சு கம்பெனி 04.02.1673 ஆம் நாள் பிரான்கோயில் மார்டின் என்பவரை முதல் கவர்னராக நியமித்தது. அவரே, சிறு மீனவகிராமமாக இருந்த புதுச்சேரியைப் பெரிய துறைமுக நகரமாக மாற்றும் கனவுத்திட்டத்தைத் துவக்கினார்.
ஃபிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கவர்னர் பிரான்கோயில் மார்டின் 1674- ஆம் ஆண்டு புதுச்சேரியில் வணிக மையத்தை அமைத்தார். அதுவே, இந்திய நாட்டின் தலைமை ஃபிரஞ்சு பகுதியாகப் பின்னாளில் அமைந்தது. அக்காலக்கட்டத்தில் இந்தியாவுடனான வணிகப் பங்களிப்பு தொடர்பாக ஐரோப்பா நாடுகளிடையே போர் மூண்டது. ஆதலால் புதுச்சேரி 1693-ஆம் ஆண்டு டச்சு நாட்டவரால் பிடிக்கப்பட்டது. பின்னர் 1699-ஆம் ஆண்டு ‘ட்ரீட்டீ ஆஃப் ரிஸ்விக்’ ஒப்பந்தத்தின்படி ஃபிரஞ்சு கம்பெனிக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. 1720-1738-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஃபிரஞ்சு கம்பெனி மாகே, ஏனாம் மற்றும் காரைக்கால் பகுதிகளை தன்னுடையதாக்கியது. 1742-1763- ஆண்டில் ஏற்பட்ட ஆங்கிலோ – ஃபிரஞ்சு போரின்போது புதுச்சேரி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு கைமாறியது. பின்னர் 1763-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின்படி மீண்டும் ஃபிரஞ்சு கம்பெனி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
1789-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஃபிரஞ்சு புரட்சிக்குப் பிறகு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு மாறிய புதுச்சேரி பின்னர் 1814-ஆம் ஆண்டு ஃபிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் பிறபகுதிகளில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் அதிகமானாலும் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகள் மட்டும் ஃபிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட ஒப்புக்கொண்டனர்.
1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஃப்ரஞ்சு அரசுடன் இணைந்து 1948-ஆம் ஆண்டு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டது. அதில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை தாங்களே தேர்ந்து எடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாள் (01.11.1954) உடன்படிக்கையின்படி புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாயின. 1963-ஆம் ஆண்டு இவ்வுடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் சந்திரநாகூர் பகுதி மேற்குவங்கமாநிலத்துடன் இணைக்கப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகள் ஒருங்கிணைந்து நடுவண் அரசின் ஒன்றிய பகுதியாக (புதுச்சேரி யூனியன் பிரதேசமாக) மாறியது.